வரும் பிப்ரவரி 1-ம் தேதி கேபிள் மற்றும் டிடிஹெச் சேவைகளின் விலையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
வரும் பிப்ரவரி 1-ம் தேதி கேபிள் மற்றும் டிடிஹெச் சேவைகளின் விலையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இந்தப் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ள டிராய் அதைத் திரும்பப்பெறுவதாகவும் தெரியவில்லை. கூடுதல் காலஅவகாசம் கொடுக்கப்போவதாகவும் தெரியவில்லை. எனவே நீங்கள் இதுவரை இதுதொடர்பாக எதுவும் செய்யவில்லை என்றால் முதல்கட்டமாக எந்தெந்த சேனல்கள் தேவை என்பதைத் தேர்வு செய்தாக வேண்டிய நேரம் இது. தேர்ந்தெடுத்தபின் அவற்றின் மொத்த விலை என்னவென்று கண்டுபிடிப்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. மொத்தமாக என்ன விலை வரும் என்பதை எளிதாக அறிந்துகொள்ள இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது டிராய். அதில் எப்படி உங்கள் டிவி சந்தாவுக்கான விலையைக் கண்டறியலாம் என்று விரிவாக இனி பார்ப்போம்.
கேபிள் டிவி சேனல்கள்
சுருக்கமாகப் பார்க்கவேண்டும் என்றால் 100 சேனல்களைப் பெறுவதற்கு network capacity fee (NCF) தொகையாக 18% ஜி.எஸ்.டி வரியுடன் மொத்தம் ரூ.153.40 கட்டணம் செலுத்தவேண்டும். இதில் 25 தூர்தர்ஷன் சேனல்கள் கண்டிப்பாகச் சேர்க்கப்படும். மீதி 75 சேனல்களை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். இலவச சேனல்களுக்குக் கூடுதல் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது. கட்டண சேனல்களுக்கு இந்த NCF போக அந்த சேனலின் கட்டணத்தையும் செலுத்தவேண்டும். HD சேனல்கள் 2 சேனல்களாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
டிராய் அறிமுகப்படுத்தியிருக்கும் இணையதளம்: https://channel.trai.gov.in/home.php
Click Here
இந்தத் தளத்தினுள் சென்றதும் எப்படிக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகின்றன என்ற விளக்கம்கொடுக்கப்பட்டிருக்கும். அதைப் பார்த்துவிட்டு 'Get Started' பட்டனை கிளிக் செய்யுங்கள். பின்பு உங்களது பெயர், மாநிலம், மொழி போன்ற தகவல்களை கேட்கும் இந்தத் தளம். இதைக் கொடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை, கொடுக்காமல் `skip' பட்டனை க்ளிக் செய்துகொண்டே சென்றுவிடலாம்.
பின்பு சேனல்கள் தேர்ந்தெடுக்கவேண்டிய பக்கம் வரும். தேர்ந்தெடுக்கவேண்டிய 100 சேனல்களில் 25 தூர்தர்சன் சேனல்கள் தானாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கும். முதலில் பணம் கட்டவேண்டிய `Pay Channels' பட்டியல் இருக்கும். இவற்றில் தேவையான சேனல்களை தேர்வு செய்யலாம். அதற்கு முன் மேலே இருக்கும் `Channel Bouquet list' என்னும் பகுதிக்குச் சென்று டிவி நிறுவனங்கள் தரும் காம்போ பேக்களையும் தேர்வு செய்துகொள்ளலாம். இதில் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் சேனல்கள் பலவற்றை ஒன்றாகக் குறைந்த விலைக்குத் தரும். இதை முதலில் செய்வதன் மூலம் இதில் தேர்ந்தெடுக்கப்படும் சேனல்களை தனியாகத் தேர்ந்தெடுக்காமல் மற்ற சேனல்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கலாம்.
டிராய் தளம்
இந்த காம்போக்களை சரியாகத் தேடி எடுக்க `Channel Bouquet list' பக்கத்தில் இருக்கும் `Broadcaster' ஃபில்டரில் ஏதேனும் டிவி நிறுவனத்தை (உதாரணத்துக்கு SUN TV Network Limited) தேர்வுசெய்யவும். அதில் பட்டியலிடப்படும் காம்போக்களில் எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். தேர்ந்தெடுக்கத் தேர்ந்தெடுக்க மொத்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சேனல்களின் எண்ணிக்கை மற்றும் சந்தாவின் மொத்த விலை என இரண்டும் மேலே அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும்.
இதற்குப் பின் `Pay Channels' பகுதிக்கு வந்து மொழி, வகை போன்ற ஃபில்டர்களை கொண்டு வேண்டிய சேனலைக் கண்டறிந்து அவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். அருகில் இருக்கும் `Free To Air Channels' பகுதியில் இலவச சேனல்கள் இருக்கும். இப்படித் தேர்வுசெய்துகொண்டே இருக்கும்போது 100 சேனல்களுக்கு மேல் வேண்டுமென்றால் 25 சேனல்களுக்கு 20 ரூபாய் (GST இல்லாமல்) NCF தொகையாகக் கூடுதலாகக் கட்டவேண்டும். ஆனால் பெரும்பாலும் 100 சேனல்கள் தேர்ந்தெடுப்பதற்கே நாம் திணறிவிடுவோம். அதனால் இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.
டிராய் தளம்
ஏன் 100 சேனல்கள்கூட இதில் தேர்ந்தெடுக்கமுடியாதா என்று நீங்கள் கேட்கலாம். தேவைப்படும் கட்டணமுள்ள சேனல்கள் (HD அல்லாதவர்களுக்கு) மட்டும் தேர்ந்தெடுத்துவிட்டால் எப்படியும் மீதி 40 சேனல்களுக்கான இடம் உங்களிடம் இருக்கும். நமக்குத் தெரிந்த மொழியில் அத்தனை பரிச்சயமான இலவச சேனல்களே இருக்காது. டிராய் பட்டியலிடும் சேனல்கள் யாவும் அனைத்து சேவைகளிலும் இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. அதனால் இலவச சேனல்கள் தேர்ந்தெடுப்பதுதான் சிரமமாக இருக்கும். இதற்குக் கொஞ்சம் கூடுதலாகப் பணம் செலுத்திக் கட்டண சேனல்களையே பார்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிடுவோம். இதைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள் போல.
இப்படி மொத்தமாக வேண்டிய சேனல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுத்தபின் அதற்கான விலையை இந்த இணையத்தளத்தில் பார்க்கலாம். மேலும் `optimise' என்ற வசதி ஒன்றைக் கொடுக்கிறது டிராய். இறுதியாக இதை க்ளிக் செய்வதன் மூலம் தானாகவே நீங்கள் தேர்வுசெய்த சேனல்களைச் சேர்த்து அதுவாகவே காம்போக்களை தேர்வுசெய்து இறுதியாக ஒரு பட்டியலை தரும். இந்தப் பட்டியல் பலநேரங்களில் நீங்கள் தேர்வுசெய்த போது வந்த விலையைவிடவும் சற்றே குறைவாகவேஇருக்கும். இந்தப் பட்டியலைக் குறித்துவைத்து இதை உங்கள் சேவைகளில் தேர்வுசெய்வது நலம். நீங்கள் தேர்வுசெய்யும் சேனல்களுக்கு இதில் குறிப்பிடப்படும் விலைக்கு மேலான தொகையை எந்த சேவையும் உங்களிடமிருந்து வசூலிக்கமுடியாது. அப்படி வசூலித்தால் நீங்கள் சட்டபூர்வமாக்க அவர்கள் மீது புகார் செய்யமுடியும்.
டிராய் தளம்
நாங்கள் தோராயமாகச் சிலரிடம் தங்களின் அபிமான சேனல்களை கவனமாகத் தேர்வுசெய்யச் சொல்லியதில் கிட்டத்தட்ட அனைவருக்குமே மொத்த விலை ரூபாய் 300-ஐ தொட்டுவிட்டது. பலரால் குறைந்தபட்ச 100 சேனல்களையே தேர்ந்தெடுக்க முடியவில்லை. இந்தப் புதிய முறையில் விலையும் சற்றே அதிகம் என்றுதான் அனைவரும் தெரிவித்தனர். இதற்கு நாள்கள் போகப் போக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டால் சேனல்களே விலைகளைக் குறைத்துவிட்டு உங்கள் போக்குக்கு வரும் என்கிறது டிராய். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட சேனல்களை உங்கள் டிடிஹெச் சேவையின் தளத்தில் பதிவுசெய்தோ அல்லது கேபிள் ஆபரேட்டர்களிடம் கூறியோ உங்களால் பெறமுடியும்.
No comments:
Post a Comment